today

Monday, 24 February 2014

மெளனத்திற்குப்பின்

நீண்ட இடைவெளிக்குப்பின் வெட்ட வெளிப்பயணம்

நான் நீண்ட காலமாகவே மெளனத்தில் இருந்து விட்டேன்.  இடையில் சதுரகிரி பயணம் என் உடலோடு தான் சென்றேன் பின்னர் எனது ஆத்துமாவை மட்டும் அங்கு அனுப்பி அவ்வப்போது தரிசனம் செய்து வருகின்றேன்.  பயப்பட வேண்டாம் உயிரை மட்டும் அங்கு அனுப்பி நினைவினால் தரிசனம் செய்தல். உதாரணமாக மனக்கோவில் கொண்ட மாணிக்கம் என்ற கதையினைப்போல்தான் இதுவும்.  மனதினால் தரிசனம் செய்தல்.
சில மாதத்திற்கு முன் ஒரு சாதுவை சந்திக்க நேர்ந்தது. அவர் திருமணம் செய்ய வில்லை வயது 50 தாண்டிவிட்டது. ஆனால் அவருக்குள் தேடுதல் மிக அதிகமாகவே இருந்தது இன்னும் அவர் அடையவில்லை என்பதை அவரது கண்ணின் கருவிழி காட்டியது. பேருந்து பயணத்தின் போது என்னுடன் பேச்சுக்கொடுத்தார்.  டவுன்ஹாலில் ஏறி பேரூர் கோவில் வரை வந்தார். எனது கிருக்கனைப்போன்ற  தோற்றம் (வயது 42 தான் ஆனால் 65 வயதைப்போன்ற தோற்றம்), கையிலே கிழிந்து உருட்டி தையல் போடப்பட்ட ஒரு அழுக்கான துணிப்பை, எனது எம்.பீ.ஏ, படிப்பின் அகம்பாவமற்ற கண்கள் குழந்தையைப்போன்ற வெகுளித்தனம் எதையும் சட்டைசெய்யாது சிவனே என்று சன்னலில் சிறுபிள்ளைத்தனமாக வெறித்த பார்வையுடன் வேடிக்கை பார்த்து வந்ததையெல்லாம் கவனித்து விட்டு  தம்பி ஏதேனும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று பேச்சை ஆரம்பித்தார் நான் சற்று சிரித்துவிட்டு சொன்னேன்.  ஆமாம் நான் மனநிலை பாதிக்கப்பட்டவன், எனது கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு சில ஆண்டுகளாக என்ன நடந்தது என்றே தெரியாது கிறுக்கனாய் ரோடு ரோடாக அலைந்தேன் பல மாதங்களாகவே சாப்பிடாத காரணத்தினால் உடல் மெலிந்து போய் நினைவிலே மட்டும் உயிரோடு இருந்தேன் என்ன சாப்பிட்டேன் எங்கு இருந்தேன் என்ன உடுத்தினேன் என்பதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. இறுதியில் எனது தகப்பனார் நான் பாபநாசத்திலே (நெல்லை மாவட்டம்) ஒரு பாறையில் படுத்திருப்பதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்துச்சென்று மனநல மருத்துவமனையில் சேர்த்து இரண்டு மாத காலம் தொடர்ந்து தூக்க மாத்திரையும் எப்போதெல்லாம் விழித்தேனோ அப்போதெல்லாம் சோறும் கொடுத்து என்னை சுயநினைவிற்கு கொண்டுவந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றேன். அப்படியென்றால் உடலை மறந்தவன் என்று சொல்லுங்கள். உடலை ஏதேனும் ஒருவகையில் மறப்பது அல்லது பற்றற்றிருப்பது தான் ஞானத்தின் முதல் படி.என்றார். ஆமாம் இதுவும் சரிதான் என்றேன். அதற்காக எல்லோரும் கிருக்கனாக ஆனால் தான் ஞானம் கிடைக்கும் என்பதல்ல. ஞானம் என்பது பெறும் சரக்கல்ல அல்லது எங்கோ கிடைக்கும் சரக்கல்ல ஏற்கனவே ஞானம் இருக்கின்றது அதை நாம் புரிந்து கொள்ளல்தான் ஞானம் அடைவது. என்றேன்.

ஏதோ உங்களிடத்தும் சிறிது சரக்கு இருக்கு போலிருக்கிறதே என்றார். ஒரு புன்னகை மட்டுமே எனது பதிலாக இருந்தது. உங்களைப்பற்றி கூறுங்கள் என்றேன். நான் பெரிய பணக்காரன் சொத்துகளுக்கு இரண்டே வாரிசு நானும் எனது, அண்ணனும் அண்ணன் இப்போது இறந்துவிட்டார், நான் எனது 24 வயதில் பெண் சபலம் காரணமாக வீட்டை விட்டு ஓடி பாம்பேயில் பல ஆண்டுகள் விபச்சாரிகளோடு காலம் கழித்து வந்தேன். வித விதமான உடல் எடை கொண்ட பெண்களோடு இரவிலே படுத்து விடியும் வரை அவளோடு உறவில் இருப்பேன் விடிந்ததும் அவளிடம் பெற்ற இன்பம் இன்னதாக இருந்தது என்ற அனுபவம் மறந்து போய்விடும் மீண்டும் அவளையே விலைக்குப்பேசி ஒருவாரம் வைதிருப்பேன் மீண்டும் ஞாபகம் மறந்துவிடும் இவ்வாறு தொடர்ந்தது இறுதியில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.  எந்த உழைப்பும் கிடையாது அண்ணன் ஏடிஎம்மில் பணம் போட்டுவிடுவார் நான் எடுத்து செலவழிப்பேன். நன்றாக அனைத்தையும் சாப்பிடுவேன் மது, கஞ்சா, எல்லாவிதமான போதைப்பொருட்கள் எல்லா கெட்ட பழக்கங்களும் பழகியிருந்தேன். இறுதியில் எல்லாவற்றிலும் ஒன்றுமில்லை என்பதை எனது ஆத்ம பூர்வமான அனுபவத்தால் உணர்ந்தேன். பின் எல்லா சாமியார்களையும் சென்று பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ எனக்கு தெரிந்த மார்க்கத்தில் இப்போது அமைதியைத்தேடி அழைகின்றேன்.  மன அமைதியும் நிம்மதியும் எங்கும் எனக்கு கிடைக்கவில்லை இப்போது புனித யாத்திரையில் இங்கு வந்துள்ளேன்.  நான் இப்போது அனாதை இனி எனது அண்ணனிடமிருந்து பணம் ஏதும் வராது நான் ஒருவன் உயிருடன் இருப்பதையே அண்ணன் குடும்பத்தாரிடம் இருந்து மறைத்துவிட்டார்  காலங்களும் ஓடிவிட்டன இப்போது பிச்சைமட்டுமே எடுத்து வயிற்றுப்பிழைப்பை பார்க்கவேண்டியுள்ளது ஆனால் ஒன்று எனது இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் எல்லாம் அனுபவித்து விட்டேன் எதிலும் ஒன்றுமில்லை என்பதை நான் இப்போது உணர்ந்துவிட்டேன் எல்லாம் சிறிது நேர ஞாபகம் அதனால் ஏற்படும் சந்தோசம் தான்' மனம்'  தான் எல்லா மாய வேலைகளையும் செய்கிறது இதில் அதில் ஏதோ இருப்பதாக மனம் சொல்லிக்கொடுக்கிறது அதனையும் ஏமாந்து நாம் அதன் வழியில் சென்று வீணாய்ப்போய் இறுதியில் மனத்தை அடக்கவும் அமைதிப்படுத்தவும் எங்கெல்லாமோ போய் வருகின்றோம் அங்கும் ஏது மில்லை இதற்கும் அப்பால் ஏதோ ஒன்று உள்ளது என்பதை உள்ளிருந்து ஆத்மா சப்தமிடுகின்றது அதனைத்தேடித்தான் இப்போது அழைகின்றேன் என்றார்.
அடச்சீ இவ்வளவு நேரம் ஒரு பிச்சைக்காரனிடமா, எய்ட்ஸ் நோய் உள்ளவனிடமா பேசிக்கொண்டு வந்தோம் என்று மாயா லோகத்திலிருந்து ஒருசப்தம் அகம்ஹாரத்தை கேட்டது எனது குருநாதர் இடைமறித்து 'அன்போடிரு' என்று ஆசீர்வதித்தது இப்போது ஞாபக்த்துக்கு வந்தது.  ஒரு மானிடநிடத்தில் அன்போடும் கருணையோடும் இருப்பதே ஆன்மீகம்.  அவரது பிறவி இரக்சியத்தை என்னிடத்தில் கூறிவிட்டார்.  நான் எனது குருநாதரைத்தியானித்தேன். அவர் அப்போது புன்னகையுடன் நானும் உன்னோடுயிருந்து அவன் பேசியதைக்கேட்டேன் என்றார். அவனுக்குத்திருவாசகத்தை பற்றிக்கூறிவிடு என்றார் அசரீரியாக. உடன் கோவிலில் இருந்த பெட்டிக்கடையில் 'திருவாசகம்' புத்தகத்தை வாங்கி அதில் 'அன்போடிரு' என எழுதி அவரிடத்தில் கொடுத்து இதை நன்றாக வாசியுங்கள் அய்யா என்றேன் படிக்காதீர்கள் மனதினுள் அமைதியாக வாசியுங்கள் என்றேன். அவர் அதில் ஏதோ எழுதினீர்களே என்ன என்று முதலில் அதைப்பார்த்தார். 'அன்போடிரு' என்று சத்தமாக வாசித்தார். அவருக்கு அழுகையை அடக்கமுடியவில்லை கண்ணீர் சிந்தினார் 'அன்போடிரு' என்று அழுத்திச்சொன்னார்.  இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ஞானமையா இந்த வார்த்தைகள், அன்பு எங்கும் கிடைப்பதில்லை அன்பை நாம் பிற உயிர்களிடத்தில் காட்டினால் போதும் இப்பிரபஞ்சமே அன்பைப் பிரதிபலிக்கும் என்றேன் நான். அன்பு சகலத்தையும் சகிக்கும்.  ஆசையே துண்பங்களுக்குக்காரணம் என்று சொன்ன புத்தனுக்கும் இவ்வுலகில் எல்லோரும் அன்பொடிருக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. என்றேன். அய்யா சாப்பிட்டீர்களா என்றேன் இல்லை கிடைத்தால் மட்டும் சாப்பிடுவேன் என்றார் அவருக்கு 20 ரூபாய்க்கு 4 இட்லி வாங்கிக்கொடுத்தேன்.  இப்பிரபஞ்சம் சம்மதிதால் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பேரூர் பட்டிலிங்க சிவனை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்து எப்போதும் தியானம் செய்யும் இடத்தில் இருந்துவிட்டு வந்தேன். அந்த பெரியவரைப்பார்த்தேன் காணவில்லை அவர் இனி எங்குமிருப்பவர் ஏனெனில் அவர் அநாதை இப்போது அவருக்கு இந்த பூமியே சொந்தம் அவரின் காலுக்க்குக்கீழ் இருப்பன அனைத்தும் அவருக்குச்சொந்தம். எனது குருநாதரின் திருவாசக தீட்சை மூலம் அவர் ஞானப்பசி தீர எனது குருநாதரையும் தியானித்திருந்தேன்.  திருவாசகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது எனது குருநாதரின் விளக்கம் அடுத்த பயணத்தின் போது. அதுவரை மட்டும் 'அன்போடிருங்கள்'.